மூடு

வரலாறு

சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியை ஆட்சி புரிந்தவர்களில் அதியமான் நெடுமானஞ்சி மிகவும் முக்கியமானராவார். தமிழ் பெண் புலவரான ஔவையாரை ஆதரித்தார். 8-ம் நூற்றாண்டில் சேலம் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் பல்லவர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது என அறியப்படுகிறது.அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் கங்கா பல்லவர்களின் கீழ் இருந்தது.8-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கங்கா பல்லவர்கள் பாரமஹால் பகுதியை ஆட்சி செய்தனர்.

9-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 2ம்-நூற்றாண்டுகள் இராஷ்டிரகூடர்களின் செல்வாக்கு இம்மாவட்டத்தில் இருந்தது. இந்த சமயத்தில் தெற்கில் சோழர்கள் அதிகாரத்திற்கு வந்தனர். கி.பி.894-ல் முதலாம் ஆதித்திய சோழன் கொங்கு நாட்டை கைப்பற்றினார்.கி.பி.949-950-ல் சோழர்கள் இராஷ்டகூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இராஷ்டகூடர்களின் அரசர் மூன்றாம் கிருஷ்ணரின் இறப்புக்கு பிறகு அவர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. கங்கவாடி சோழப்பேரரசுடன் இணைக்கப்பட்டு, தகடூர் அதியமானின் ஆட்சி பகுதியாக ஆக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்கள் அதிகாரம் பெற்று சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, கங்கவாடி ஹொய்சாளர்கள் வசம் வந்தது. மேலும் கோலார், கோட்டையூர் மற்றும் கொங்கு நாட்டின் மேற்குப்பகுதிகளை கைப்பற்றினார். பாரமஹால் மற்றும் தால்காட் பகுதிகள் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. ஆனால் அதியமான் பகுதிகள் சுதந்திரமாகவும், பெயரளவுக்கு மட்டும் சோழர்களுடன் இணைந்திருந்தது. ஹொய்சாள அரசர் வீர சோமேஸ்வரனை சோழர்கள் பகுதியிலிருந்து விரட்ட யாதவர்களுக்கு முதலாம் சுந்தர பாண்டியன் உதவினார்.

13-ம் நூற்றாண்டின் வரலாறு ஹொய்சாளர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு இடையேயானது. வடக்கில் யாதவர்களின் தாக்குதலுக்கு பிறகு ஹொய்சாளர்கள் கொங்கு நாட்டின் தெற்கு பகுதிக்கு பின்வாங்கினர். ஜடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் யாதவர்களுடன் இணைந்து ஹொய்சாள அரசன் வீரசோமேஸ்வரனை சோழ பகுதியிலிருந்து விரட்டி அடிக்க உதவியதாக அறியப்படுகிறது. ஆனால் அவர் தால்காட் பகுதியில் ஆட்சி செய்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் வீர சோமேஸ்வரன் மகன் வீர ராமநாதன் சேலம் மாவட்டத்தை முழுவதுமாக ஆட்சி செய்ததாக பதிவுகள் உள்ளன. பின்னர் பாண்டியர்கள், தில்லி சுல்தானின் முகமதிய ஆட்சியர்களால் சூழப்பட்டனர்.

விஜய நகர இராஜ்ஜியத்தின் எழுச்சி 14-ம் நூற்றாண்டில் காணப்பட்டது. மதுரையில் உள்ள முகமதிய சுல்தானின் அரசை வீழ்த்துவதற்காக கி.பி.1365-66 ஆண்டு முதலாம் புக்கா தனது கவனத்தை தெற்கு திசையில் திருப்பினார். இந்த படையெடுப்புகளில் ஒன்றில் தான் சேலம் மாவட்டம் விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி.1565-ம் ஆண்டு வரை பெருமையுடன் ஆண்ட விஜயநகர அரசர்களை தக்காண சுல்தான்களின் ஒருங்கிணைந்த படைகள் தலைக்கோட்டை, ஒசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் வீழ்த்தினர். இதே சமயம் சென்னை பட்டணத்தின் ஜெகதீரராயர் மைசூருடன் சேர்த்து பாரமஹாலையும் ஆட்சி செய்தார். இதற்கிடையில் கி.பி.1623-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கரின் மூலம் மதுரை நாயக்கர்களின் புகழ் உச்சியை அடைந்தது. பாளையக்காரர்கள் நாயக்கர்களிடம் கொண்ட விசுவாசத்தின் அடிப்படையில் இப்பகுதியை பாளையக்காரர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தனர். பாளையக்காரர்களில் ஒருவரான இராமசந்திரநாயக்கர் காவேரியின் தெற்கு பகுதியிலுள்ள நாமக்கல் வட்டத்துடன் தலைமலை பகுதியையும், கூடுதலாக கவனித்து வந்தார். நாமக்கல் கோட்டை இவர்களாலேயே கட்டப்பட்டது என கூறப்படுகிறது. காவேரியின் வலது கரையில் அமைந்துள்ள காவேரிபுரத்தையும் சேர்த்து நாயக்கர்களின் பேரரசின் முக்கிய பகுதிகள் கெட்டி முதலியார்களின் பொறுப்பில் இருந்தது. மேலும் காவேரிபுரம் மைசூர் பீடபூமிக்கு செல்லும் ஒரு முக்கிய வழிப்பாதையின் தொடக்கத்தில் அமைந்திருந்தது. இவர்களுடைய அதிகாரத்தின் மையப்பகுதி தாரமங்கலமாக இருந்ததால் அங்கே ஒரு பெரிய கோயிலை நிறுவினர். இவர்களுடைய ஆட்சி கிழக்கே தலைவாசல் வரையும், தெற்கே கோவையிலுள்ள தாராபுரம் வரை நீண்டியிருந்தது. ஓமலூர் மற்றும் ஆத்தூரில் உள்ள கோட்டைகள் கெட்டி முதலியார்களின் முக்கிய கோட்டைகளாகும்.

கி.பி.1611-ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தை சேர்ந்த காந்திராவேநரசராஜா என்பவர் கெட்டி முதலியார்களிடமிருந்து கோயம்புத்தூரிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றினார். மேலும் இவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி.1654-ம் ஆண்டு பாரமஹாலுடன் சேர்த்து விராலகத்திரதுர்க், பென்னாகரம், தருமபுரி மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். ஓசூரை மைசூர் மன்னரான சந்திரசங்கர் தொட்டா தேவராஜ் என்பவரிடமிருந்தும், ஓமலூரை கெட்டி முதலியார்களிடமிருந்து கைப்பற்றி அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றினார். மராட்டியர்களின் ஆக்கிரமிப்பால் மைசூர் அரசு ஒடுக்கப்பட்டது. பாரமஹால் மற்றும் தால்காட் பகுதி மராட்டியர்களின் கைகளுக்கு மாறியது. கி.பி.1688-89 -ஆம் ஆண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராயர் பாரமஹால் பகுதியின் மீது படையெடுத்து தருமபுரி மனுக்கோண்டா, ஓமலூர் பரமத்தி, காவேரிபட்டணம் மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். கி.பி.1704-ம் ஆண்டில் சிக்க தேவராயரின் மரணத்திற்கு முன்பு சேலத்தின் முழுபகுதியும் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதற்கிடையில் கடப்பாவின் நவாப் அப்துல் நபிக்கான் தன்னுடைய அதிகாரத்தை தெற்கு நோக்கி செலுத்தி கி.பி.1714-ம் ஆண்டில் பாரமஹால் பகுதியின் தலைவரானார்.

கி.பி.1760-ம் ஆண்டு மைசூர் பாரமஹால் ஹைதர்அலியின் அதிகாரத்தில் இருந்தது. கி.பி.1767-ல் மெட்ராஸில் இருந்த ஆங்கிலேயே அரசு ஹைதர்அலியின் மீது தாக்குதல் நடத்தி காவேரிப்பட்டணத்தை கைப்பற்றினர். பின்னர் கிருஷ்ணகிரியை முற்றுகையிட்டனர். ஹைதர்அலி மீண்டும் வலிமையுடன் போரிட்டு, ஆங்கிலேயர்களை துரத்திவிட்டு,காவேரிப்பட்டணத்தை மீண்டும் கைப்பற்றினார். சில மாதங்களுக்கு பிறகு ஆங்கிலேயர்கள் பாரமஹால் மீது மீண்டும் ஒரு படையெடுப்பை மேற்கொண்டனர்.மேலும் தெற்கு தருமபுரி, சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல் ஆகியவை பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி சரணடைந்தது. இருந்த போதிலும் இந்த வெற்றி குறுகிய காலமே நீடித்தது. ஹைதர்அலி மீண்டும் தருமபுரி, தேன்கனிக்கோட்டை, ஓமலூர், சேலம் மற்றும் நாமக்கலை கைப்பற்றினார். இரண்டாம் மைசூர் போரின் போது சேலம் மாவட்டம் ஹைதர்அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஹைதர்அலிக்கு பின் ஆட்சிக்கு வந்த திப்புசுல்தான் அதிக அதிகாரம் பெற்றவராக இருந்தார்.திப்புசுல்தானின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர்கள் மராட்டியர் மற்றும் ஹைதாராபாத் நிஜாமுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு கி.பி.1790-ல் மூன்றாம் மைசூர் போரை தொடுத்தனர்.ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு காவேரிப்பட்டிணத்தில் வலிமையுடன் போரிட்டது. திப்புசுல்தான் முழுபலத்துடன் போரிட்ட போதும் அவரால் ஆங்கிலேயரை தடுத்து நிறுத்த முடியவில்லை. கி.பி.1791-ம் ஆண்டில் ஓசூர், அஞ்செட்டி, நீலகிரி மற்றும் இரத்தினகிரி ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. மேலும் சில கோட்டைகள் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி ஆங்கிலேயர் வசம் வந்தது. கி.பி.1791-ம் ஆண்டில் திப்புசுல்தான் தெற்கிலிருந்து ஒரு படைப்பிரிவை அனுப்பினார். அது பென்னாகரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரிடத்தில் சரணடைந்தது. கி.பி.1792-ம் ஆண்டில் திப்புசுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே சமாதானம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திப்புசுல்தான் ஆட்சியின் பாதி பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. பாலக்காட்டு பகுதியை தவிர்த்து சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும், ஒசூரின் ஒரு பகுதியும் ஆங்கிலேயர் வசம் வந்தது. ஆங்கிலேயரின் முதல் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிடமாக கிருஷ்ணகிரி அமைக்கப்பட்டது.

கி.பி.1799-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி மைசூர் போரில் ஒசூர் தாலூக்கா, நீலகிரி, அஞ்செட்டி, துர்க்கம், இரத்தினகிரி மற்றும் கெலமங்கலம் போன்ற பல இடங்கள் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற போரில் திப்புசுல்தான் இறந்த பிறகு சேலம் மாவட்டத்தின் பாலக்காடு பகுதியும் ஆங்கிலேய ஆட்சியுடன் சேர்க்கப்பட்டது.

தற்போதைய தருமபுரி மாவட்டம் ஆங்கிலேய ஆட்சியின்போது சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுக்காவாக இருந்தது. 2.10.1965-ஆண்டு தருமபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் திரு.ஜி.திருமால் இ.ஆ.ப ஆவார்

09.02.2004-ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.