மூடு

காவல்

திரு.ந.ஸ்டீபன் ஜேசுபாதம், இ.கா.ப,

1965-ம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு, தமிழகத்தின் 14-வது மாவட்டமாக உருவாக்கப்பட்டபோது, தருமபுரி மாவட்ட காவல் துறை உருவாக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு, தருமபுரி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தற்சமயம், தருமபுரி மாவட்ட காவல் துறையில் 4 காவல் உட்கோட்டங்களும், 25 காவல் நிலையங்களும், 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் மற்றும் 11 சிறப்புப் பிரிவுகள் உள்ளன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட காவல் துறையானது, 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 12 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 38 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் இதர ஒப்பளிக்கப்பட்ட ஆளிநர்களுடன் செயல்பட்டு வருகின்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கி வரும் தருமபுரி மாவட்டம், கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் மற்றும் சேலம் சரக காவல் துறை துணைத் தலைவரின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது, திரு.ந.ஸ்டீபன் ஜேசுபாதம் , அவர்கள் கடந்த 05.01.2023 முதல் தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

தருமபுரி மாவட்டமானது இடதுசாரி தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாத செயல்களும் ஏதுமின்றி அமைதியாக உள்ளது. எனினும், இம்மாவட்டத்தின் கடந்த கால நக்சலைட்டுகள் ஆதரவு செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, நக்சலைட்டுகள்/மாவோயிஸ்டுகளின் கொள்கையின்பால் இளைஞர்கள் ஈர்க்கப்படாவண்ணம் தடுக்கும் பொருட்டும், அரசு இயந்திரத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், காவல் துறையினர்-பொதுமக்கள் இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல் துறையினரும் சமூக நலப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் அதற்கேற்ப வாகன நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை வெகுவாகக் குறைக்கும் பொருட்டு, 52 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் 290 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய தருமபுரி மாவட்டத்தில், நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துவது, சாலைகளில் உரிய போக்குவரத்து சமிக்ஞைகள் நிறுவுவது, உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடைய சாலை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் முகாம்கள் நடத்துவதுடன், மோட்டார் வாகனச் சட்டமும் சிறப்பான முறையில் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர், மலைகிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தி, தருமபுரி மாவட்டம் கள்ளச்சாராயம் அற்ற மாவட்டமாக திகழ்வதை உறுதிபடுத்தி வருகின்றனர். அதேபோன்று, இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மதுபான வகைகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதைத் தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

குற்ற நடவடிக்கைகளை தடுக்க, வாகன சுற்றுக் காவல், இரவு நேர காவல் ஆகியவற்றை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், பெண்கள் பயிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், உதவி எண்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மாணவிகள் தங்களது வாழ்க்கையை பாதிக்கக் கூடிய வகையிலான செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் பொருட்டு, பதின்ம வயதில் மாணவிகள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள் குறித்தும் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மிகவும் புகழ்பெற்ற ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியானது தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமன்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பொதுமக்களின் பங்கேற்புடன் காவல் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதன் மூலம், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அசம்பாவிதங்களும் தவிர்க்கப்படுகின்றன.

காவல் நிலையத்தின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
வ.எண் உட்கோட்டம் காவல் நிலையத்தின் பெயர் தொலைபேசி எண்
1 தர்மபுரி தர்மபுரி 04342 – 260026
2 தர்மபுரி அதியமான்கோட்டை 04342 – 244237
3 தர்மபுரி தொப்பூர் 04342 – 246226
4 தர்மபுரி மதிகோண்பாளையம் 04342 – 288192
5 தர்மபுரி கிருஷ்ணாபுரம் 04342 – 243363
6 தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம், தருமபுரி. 04342 – 260058
7 அரூர் அரூர் 04346 – 222034
8 அரூர் கோட்டபட்டி 04346 – 258335
9 அரூர் கோபிநாதம்பட்டி 04346 – 242100
10 அரூர் அ.பள்ளிப்பட்டி 04346 – 225110
11 அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 04346 – 246420
12 அரூர் பொம்மிடி 04346 – 244460
13 அரூர் கடத்தூர் 04346 – 265333
14 அரூர் மொரப்பூர் 04346 – 263333
15 அரூர் கம்பைநல்லூர் 04346 – 267230
16 அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், அரூர் 04346 – 223744
17 பென்னாகரம் பென்னாகரம் 04342 – 255641
18 பென்னாகரம் ஓகேனக்கல் 04342 – 256441
19 பென்னாகரம் ஏரியூர் 04342 – 252526
20 பென்னாகரம் பெரும்பாலை 04342 – 251281
21 பென்னாகரம் பாப்பாரபட்டி 04342 – 245230
22 பென்னாகரம் இண்டூர் 04342 – 242478
23 பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையம், பென்னாகரம். 04342 – 255100
24 பாலக்கோடு பாலக்கோடு 04348 – 222100
25 பாலக்கோடு காரிமங்கலம் 04348 – 241226
26 பாலக்கோடு மாரண்டஹள்ளி 04348 – 233335
27 பாலக்கோடு மகேந்திரமங்கலம் 04348 – 238280
28 பாலக்கோடு பஞ்சப்பள்ளி 04348 – 237703
29 பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம், பாலக்கோடு. 04348 – 224100