மூடு

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளரின் தலைமையில் இயங்கி வருகிறது. மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களையும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்திட்டங்களையும், அதே போன்று சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநரால் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் கீழ்கண்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

திட்டங்கள் :

  1. விலையில்லா சலவை பெட்டி வழங்கும் திட்டம்
  2. கல்வி உதவித்தொகை வழங்குதல்.
  3. ஊரக பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்.
  4. விடுதிகள்
  5. விருதுகள் (ம) பரிசுகள்
  6. தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிiல் கல்வி அளிக்கும் திட்டம்
  7. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
  8. விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

கல்வி உதவித்தொகை

தருமபுரி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியர்களுக்கு பின்வரும் திட்டங்களின் மூலமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பள்ளிப்படிப்பு உதவித்தொகை

தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு, உதவித்தொகை, பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆங்கில வழிக்கற்பிப்பு கட்டணம் திரும்ப அளிக்கப்படுகிறது.

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முழுநேர மற்றும் இரண்டாவது முறை மாற்றம் மாலை நேர வகுப்புகளில் பட்ட மேற்படிப்பு , பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை கடந்த ஆண்டு (2016-2017) முதல் துறைத் தலைமையிலிருந்து நேரடியாக மாணவ/ மாணவிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மின்னனு பரிமாற்றம் மூலம் செலுத்தப்படுவதால் மேற்படி கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்கான இக்கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு ஏதும் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்டுவதில்லை.

ஊரக பெண் கல்வி ஊக்குவிப்புதிட்டம்

கிராமப்புறங்களிலுள்ள பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு ஊரக பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

3 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.500/-ம், 6 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு ரூ.1000/- ம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடமிருந்து 16000 மாணவியர்களுக்கு கேட்புப் பட்டியல்கள் வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.94.99 இலட்சம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. மாநில கணக்காயரிடமிருந்து உரிய உத்தரவுகள் வரப்பெற்றவுடன் சம்மந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் வாயிலாக மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடுதிகள்

தருமபுரி மாவட்டத்தில் ஏழை மாணவ/ மாணவிகளின் நலனுக்காக மொத்தம் 59 பள்ளி/ கல்லூரி மாணவ/ மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இவ்விடுதிகளில் 2238 மாணவர்கள் 1915 மாணவியர்கள் உட்பட மொத்தம் 4153 மாணவ/மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றார்கள். இவ்விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தங்கி கல்வி பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு நான்கு செட் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இவ்விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விளையாட்டு சாதனங்கள், தட்டு, டம்ளர், பாய், போர்வை, தலையணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நூலகம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

இவ்விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ/ மாணவியகளுக்கு கடந்த 01.06.2017 முதல் உயர்த்தப்பட்ட உணவுக்கட்டணமாக பள்ளி விடுதி மாணவ/மாணவியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ.900/-மும், கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்கு உணவுக்கட்டணமாக ரூ.1000/-மும், அனுமதிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் கல்வி விடுதிகளுக்காக ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்று இதுவரை ரூ. 4.25 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செலவின விழுக்காடு 88ரூ ஆகும்.

நடப்பாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுபாட்டின்கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு ஆங்கில தகவல் தொடர்பு மற்றும் ஆளுமை மேம்பாட்டை ஊக்குவித்தல் எனும் பயிற்சியினை எனும் நிறுவனத்தின் வாயிலாக வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

விருதுகள் மற்றும் பரிசுகள் :

பேரறிஞர் அண்ணா நினைவு விருது :

12-ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த இரண்டு மாணவ/ மாணவியர்களுக்கு அவர்கள் தொழிற்பட்டப்படிப்பு பயிலும் பட்சத்தில் அவர்களது தொழிற் பட்டப்படிப்பு முடியும் வரை ஆண்டுதோறும் ரூ.10,000/- வீதம் பேரறிஞர் அண்ணா நினைவு பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

தந்தை பெரியார் நினைவு விருது :

10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலிடெனிக் கல்லூரியில் பட்டயப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த இரண்டு மாணவ/ மாணவியர்களுக்கு அவர்களது படிப்பு முடியும் வரை மூன்றாண்டுகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.10,000/- தந்தை பெரியார் நினைவு விருதாக வழங்கப்பட்டு வருகிறது.

தந்தை பெரியார் நினைவு பரிசு :

2012-13 ஆம் ஆண்டு முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ/ மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் தகுதி பரிசு திட்டம் என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் ஆக மொத்தம் 1000 மாணவ/ மாணவியர்களுக்கு அவர்கள் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு முடிக்கும் காலம் வரை ஆண்டுக்கு தலா ரூ.3000/- வீதம் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

திறன்மிக்க மாணவர்களை தலைசிறந்த தனியார் பள்ளியில் சேர்த்தல் :

10-ஆம் வகுப்பில் அரசு பள்ளியில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த 5 மாணவ /5 மாணவியர் ஆக மொத்தம் 10 மாணவ/ மாணவியர்களை அவர்கள் விரும்பும் தலைசிறந்த தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயில வாய்ப்பளித்து அவர்களது கல்விக்கட்டணத்தொகையாக ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.28,000/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் புதுப்பித்தலுக்கான 10 மாணவ/ மாணவிகளுக்கு ரூ.2.48 இலட்சத்தில் நிதி ஒதுக்கீடு வரப்பெற்று முழுமையாக செலவினம் மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்ட மாணவ/ மாணவியர்களுக்கு அவர்தம் வங்கிக்கணக்கில் மின்னனு பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல் :

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 -ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டில் இத்திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 97 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ/மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான கொள்முதல் உத்தரவுகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கான உத்தரவுகள் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையகரத்திலிருந்து எதிர்நோக்கப்படுகிறது.

விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல் :

20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த தையல் கலை அறிந்தவர்களுக்கு விலையில்hh தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டுக்கு 100 விலையில்லா தையல் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 100 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கு தையல் இயந்திரம் ஒதுக்கீடு சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையகரத்திலிருந்து எதிர்நோக்கப்படுகிறது.

விலையில்லா சலவைப்பெட்டி வழங்குதல் :

சலவை தொழில் புரியும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த நபர்களுக்கு விலையில்லா சலவைப்பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டுக்கு 100 விலையில்லா சலவை பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 100 பயனாளிகளுக்கு சலவை பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கு சலவை பெட்டிகள் ஒதுக்கீடு சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையகரத்திலிருந்து எதிர்நோக்கப்படுகிறது.