மூடு

சமூக நலத்துறை திட்டங்கள்

தேதி : 01/01/2021 - 31/12/2026 | துறை: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நிதி உதவித் திட்டம்

சமூகநலத்துறையின் மூலம் (தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலகம்) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

1.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் :

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி மற்றும் பட்டப்படிப்பு/பட்டயம் படித்தவர்கள், பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

2.திருமண உதவி விவரம் :

  1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி (ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)
  2. பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).

சான்றுகள் :

  1. வயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்).
  2. ஆண்டு வருமானம் (ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்).
  3. இருப்பிட சான்று
  4. சாதிச்சான்று
  5. மணமகளின் கல்விச்சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)
  6. திருமணப் பத்திரிக்கை
  7. குடும்ப அட்டை நகல்.
  8. ஆதார் கார்டு.

3.ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் :

கணவனை இழந்த விதவை பெண்ணின் மகள் திருமணத்திற்கு இந்நிதி உதவி விதவை தாயாருக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்(அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண உதவி விவரம் :

  1. கல்வி தகுதி இல்லை. (ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு)
  2. பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)

சான்றுகள் :

  1. வயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்.
  2. இருப்பிட சான்று.
  3. சாதி சான்று
  4. மணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)
  5. திருமணப் பத்திரிக்கை
  6. குடும்ப அட்டை நகல்
  7. விதவை சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும்)
  8. வருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  9. ஆதார் கார்டு

4.அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம் :

தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற மணப்பெண்ணிற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண உதவி விவரம் :

  1. கல்வி தகுதி இல்லை. (ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)
  2. பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)

சான்றுகள் :

  1. வயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்.
  2. இருப்பிட சான்று.
  3. சாதி சான்று
  4. மணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)
  5. திருமணப் பத்திரிக்கை
  6. குடும்ப அட்டை நகல்
  7. தாய் தந்தை இறப்பு சான்று (ஆதரவற்றவர் என்ற சான்று)
  8. வருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

5.டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்:

விதவையின் மறுமணத்திற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற மறுமணம் முடிந்த 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் விதவையின் வயது திருமணத்தின் போது 20 வயது முடிந்திருக்க வேண்டும்.

திருமண உதவி விவரம் :

  1. கல்வித் தகுதி இல்;லை. (ரு.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு)
  2. பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)

சான்றுகள் :

  1. வயது சான்று
  2. முதல் கணவரின் இறப்பு சான்று.
  3. முதல் திருமண பத்திரிக்கை இரண்டாம் திருமண பத்திரிக்கை
  4. திருமணத்திற்கு முதல் நாள் வரை விதவையாக வாழ்ந்தார் என்ற சான்று
  5. விதவை மறுமணம் செய்து கொள்ளும் மணமகனுக்கு இதுதான் முதல் திருமணம் என்பதற்கான சான்று
  6. மணமகனின் வயது சான்று (40-க்குள் இருக்க வேண்டும்)
  7. இருப்பிட சான்று
  8. சாதிச்சான்று
  9. வருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

6.டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம் :

தம்பதியர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டோர் அதாவது (எஸ்சி/எஸ்டி ) பிரிவினராகவும் மற்றொருவர் முற்பட்ட வகுப்பு (அ) பிற்பட்ட வகுப்பு (பிசி/எம்பிசி) பிரிவினராகவும் இருந்தால் இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணம் செய்த 2 வருடத்திற்குள் (வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்) விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண உதவி விவரம் :

  1. கல்வி தகுதி இல்லை. (ரூ.15,000/-க்கான தொகை ECS மூலமும் மற்றும் ரூ.10,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு.
  2. பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி ரூ.50,000/- (ரூ.30,000/-க்கான தொகை ECS மூலமும் மற்றும் ரூ.20,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு.

சான்றுகள் :

  1. வயது சான்று (மணமகள் மற்றும் மணமகன்)
  2. திருமண பதிவு சான்று
  3. வருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

7.முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்: (01.08.2011-ம் ஆண்டு முதல்):

திட்டம் ஐ ஆண் வாரிசு இன்றி ஒரே பெண் குழந்தையுடன் தம்பதியரில் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தையின் பெயரில் ரூ.50,000/- அரசால் முதலீடு செய்யப்படும்.

திட்டம் 1 :

ஆண் வாரிசு இன்றி இரு பெண் குழந்தைகளுடன் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தைகளின் பெயரிலும் தலா ரூ.25,000/- வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.

திட்டம் 2 :

ஒரு பெண் குழந்தைக்கு பிறகு இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து கருத்தடை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000/- வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.

தேவையான சான்றுகள் :

  • குழந்கைளின் பிறப்பு சான்றுகள்.
  • வருமானச் சான்று (ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்)
  • இருப்பிடச்சான்று.
  • ஜாதிச்சான்று.
  • குடும்ப அறுவை சிகிச்சை சான்று.
  • ஆண் வாரிசு இல்லை என்ற சான்று.
  • குடும்ப அட்டை.
  • ஆதார் கார்டு.
  • குடும்ப போட்டோ.

8.தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் :

தருமபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் 13.04.2002 அன்று தருமபுரி அரசு தலைமை மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொட்டில் குழந்தை மையத்திற்கு முதல் பெண் குழந்தை 13.04.2002 அன்று செல்வி க/பெ. சித்தன், எ.ஜெட்டிஅள்ளி, நல்லம்பள்ளி ஒன்றியம் , தருமபுரி மாவட்டம் என்ற தம்பதியர்களுக்கு ஐந்தாவது பெண் குழந்தை என்பதால் 13.04.2002 தேதியில் மருத்துவர் முன்னணியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை எஸ்.ஆர்.பௌலின் சுவாமிநாதன், சமூக சேவகர், போலிஸ் ஆப்போஸ்டஸ் காண்வேன்ட், சென்னை-600016 என்ற தத்து நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

மேலும் தற்போது 1463 வது பெண் குழந்தை லட்சுமிதேவி, க/பெ. முன்னணியில் காளியப்பன், சந்தம்பட்டி குள்ளம்பட்டி(அ),போச்சம்பள்ளி (வ), கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற தம்பதியர்களுக்கு மூன்றாவது பெண் குழந்தை என்பதால் பெற்றோர்கள் மூலம் ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தையை பாராமரிக்கும் கரங்கள், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். என்ற தத்து நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

இளம் வயது திருமணம் தடுப்புச் சட்டம்-2006 :

இளவயது திருமணம் ஒரு சமுதாய பின்னடைவு ஆகும். இளம் வயது திருமணத்தினால் பெண்ணின் உடல் நிலை,இளம் வயதில் கருவுறும் நிலை,அதன் மூலம் எடை குறைவான குழந்தை, குழந்தையின் கற்றல் குறைபாடு ஒட்டுமொத்த வாழ்க்கை சுழற்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் இளவயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு ஆலோசனைகள் மூலம் குழந்தையின் கல்வி தொடரப்படுகிறது. மேலும் அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு முகாம் தொடர் நிகழ்வாக நடத்தப்படுகிறது

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்-2005 :

குடும்பங்களில் நடக்கும் பலவிதமான சிரமங்களுக்கு ஆளாகும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். குடும்ப வன்முறை புகார் மனுக்களில்; உள்ள காரணங்கள் முறையே பெண்ணின் கணவர் வேறு பெண்ணோடு தகாத தொடர்பு கொண்டு குடித்துவிட்டு வந்து வீட்டை விட்டு விரட்டி சித்ரவதை செய்வதாகவும் ,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல் ஆகியன இதுவரை இதனடிப்படையில் 776 மனுக்கள் பெறப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேவையின் அடிப்படையில் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பொருளாதார உதவி, இருப்பிட உதவி இழப்பீடு உதவி, குழந்தைகளுக்கு தேவையான ஜீவனாம்ச உதவிகள் நீதிமன்றத்தின்மூலம்; பெற்றுத்தரப்படுகிறது.

வரதட்சணை தடுப்புச் சட்டம்-1961 :

வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றமாகும்.இது சமூகத்தில் உள்ளபெண்களின் உரிமைகளையும் ,சமத்துவத்தையும் மறுக்ககூடிய ஒரு அவலத்தின்அறிகுறி ஆகும்.வரதட்சணை பெறாத சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்ஆகும்.2010-11முதல் இம்மாவட்டத்தில் 111 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பேணிக்காத்தல் மற்றும் பராமரிப்சட்டம்-2007 :

மூத்த குடிமக்கள் நலனை பேணும் பொருட்டு தருமபுரி மாவட்டத்தில் மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தபட்ட கோட்டாச்சியருக்கு அனுப்பபட்டு தீர்வு காணப்படுகிறது.

சமூக நலத்துறை
வ.எண் சேவையின் பெயர் சேவை கட்டணம் தொடர்புகொள்ள
1 தர்மாம்பால் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம் Rs.120 Visit nearest CSC
2 அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம் Rs.120 Visit nearest CSC
3 மூவாலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதி உதவித்திட்டம் Rs.120 Visit nearest CSC
4 ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் Rs.120 Visit nearest CSC
5 டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித்திட்டம் Rs.120 Visit nearest CSC
6 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 1 மற்றும் திட்டம் 2 Rs.120 Visit nearest CSC
Contact Details
பெயர்/பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம் 04342-233088 dswodpi[at]gmail[dot]com மாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட சமூக நல அலுவலகம் ,கூடுதல் கட்டிடம், கலெக்டர் அலுவலகம் பின்பக்கம், தருமபுரி -636705

பயனாளி:

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள்

பயன்கள்:

திருமண நிதி உதவித் திட்டம்,ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம்,ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம்,விதவை மறுமண நிதி உதவித் திட்டம்,கலப்பு திருமண நிதி உதவித் திட்டம் ,பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்,தொட்டில் குழந்தை வரவேற்பு மையம்

விண்ணப்பிப்பது எப்படி?

மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம்,கூடுதல் கட்டிடம், கலெக்டர் அலுவலகம் பின்பக்கம், தருமபுரி -636705