ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (பள்ளிக் கல்வித்துறை)
நோக்கம் :
குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், தக்க வைத்தல் மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றின் வாயிலாக மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிப் படிப்பு வரையிலும் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி செயல்பட்டு வருகின்றது.
இல்லம் தேடி கல்வி :
கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கத்தினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் 1,05,748 மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று வருகின்றனர். 7,256 பெண் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு தொடக்க நிலை மற்றும் நடுநிலை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
தற்போது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் குறைதீர்கற்றல் தொடக்கநிலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
எண்ணும் எழுத்தும் :
கொரோனா தொற்று காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் எண்ணும் எழுத்தும் முழுவதுமாகப் படிக்காமலேயே அடுத்த வகுப்புக்கு சென்று விட்டதால் ஏற்பட்ட இடைவெளியைப் போக்குவதற்காக எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கி செயல்பட்டு வருகின்றது. அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் பெறாமல் விடுபட்ட குழந்தைகளுக்கு அதை பெறுவதற்கான வாய்ப்பை இத்திட்டம் உறுதி செய்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் 2488 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு 32047 மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று வருகின்றனர்.
பள்ளி செல்லா குழந்தைகள் :
வறுமை, பெற்றோரின் அறியாமை, வேலை வாய்ப்பு காரணமாக பக்கத்திலுள்ள மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடம்பெயர்தல், பெற்றோரை இழத்தல், படிப்பதில் விருப்பமின்மை போன்ற காரணங்களால் பளளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் கல்வி கற்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றது.
2022-23 –ஆம் கல்வி ஆண்டில் 834 பள்ளி செல்லா மாணவர்கள் கண்டறியப்பட்டனர். இந்த மாணவர்களில் 404 மாணவர்கள் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். இவர்களில் 18 வயதை தாண்டிய 72 மாணவர்களை தவிர பிற 230 மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து :
பள்ளிகள் இல்லாத குக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 535 மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று வருகின்றனர். ஓவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.6000 வீதம் போக்குவரத்து செலவுக்காக வழங்கப்பட்டு வருகின்றது.
மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி :
மாற்றுத்திறனாளி குழந்தைகள் வீடுகளில் முடங்கி விடாமல் அவர்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உள்ளடங்கிய கல்வி சிறப்பு ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களுடைய தேவைகளை கண்டறியும் விதத்தில் மருத்துவ முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் 3079 மாணவர்கள் கண்டறியப்பட்டு 2954 மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதம் ரூ..200 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. வீடு சார்ந்த மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் வீடுகளில் சென்று உடற்பயிற்சி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடிப்படை கடமைகளை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. 748 குழந்தைகளுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் செலவு வழங்கப்பட்டு வருகின்றது. 2122 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையும் அவர்களில் 1685 மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனிப்பட்ட அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ஆம் தேதியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நவம்பர் 14 முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெற்றன.
ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் (குறுவள மைய பயிற்சி )
தகவல் தொழில் நுட்ப பயிற்சி :
ஆசிரியர்கள் கணினி மற்றும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப வசதிகளை கற்பிப்பதில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக பயிற்சி வழங்கப்படுகிறது.
2022-23-ஆம் கல்வியாண்டில் 5772 ஆசிரியர்களுக்கு தகவல் தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட்டுள்ளது
ஆசிரியர்களுக்கான தொழில் மேம்பாடு பயிற்சி :
வகுப்பறையில் மாணவர்களை மேலாண்மை செய்வதற்கான திறமைகளை பெறுவதற்கு ஏதுவாக இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியின் வாயிலாக 2022-23-ஆம் கல்வி ஆண்டில் இது வரையிலும் 2413 ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளனர்